சாத்தான்குளம் வியாபாரி குடும்பத்தினருக்கு சரத்குமார் நேரில் ஆறுதல் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்
சாத்தான்குளம் வியாபாரி குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் சரத்குமார், ‘அவர்களது குடும்பத்துக்கு சகோதரனாக துணை நிற்பேன்’ என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி,
சாத்தான்குளம் வியாபாரி குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் சரத்குமார், ‘அவர்களது குடும்பத்துக்கு சகோதரனாக துணை நிற்பேன்’ என்று தெரிவித்தார்.
சரத்குமார் ஆறுதல்
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று மதியம் சாத்தான்குளத்துக்கு சென்றார்.அவர், சாத்தான்குளம் மெயின் பஜாரில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது செல்போன் கடையின் முன்பு வைக்கப்பட்டு இருந்த அவர்களது உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர், அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது வீட்டுக்கு நடந்து சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.
பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
சரியான பாதையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது மரணம் அனைவருக்கும் மிகப்பெரிய வேதனையை தருகிறது. அந்த வேதனையை பகிர்ந்து கொள்வதற்காக, அவர்களது வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினேன். மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
தவறு செய்த அனைவரும் தண்டனை பெறுவது அவசியம். இனியும் இப்படி ஒரு சம்பவம் எங்கும் நிகழக்கூடாது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது குடும்பத்துக்கு என்றும் ஒரு சகோதரனாக துணை நிற்போம்.
Related Tags :
Next Story