கோபியில் அதிகமாகும் நோய் தொற்று ஈரோடு மாவட்டத்தில் செவிலியர் உள்பட 16 பேருக்கு கொரோனா போக்குவரத்து பணிமனை மூடப்பட்டது


கோபியில் அதிகமாகும் நோய் தொற்று ஈரோடு மாவட்டத்தில் செவிலியர் உள்பட 16 பேருக்கு கொரோனா போக்குவரத்து பணிமனை மூடப்பட்டது
x
தினத்தந்தி 4 July 2020 11:30 PM GMT (Updated: 4 July 2020 8:07 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் செவிலியர் உள்பட புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் செவிலியர் உள்பட புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஊழியருக்கு தொற்று உறுதியானதால் போக்குவரத்துக்கழக பணிமனை மூடப்பட்டது. கோபியில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

16 பேருக்கு கொரோனா

கொரோனா பரவல் ஈரோடு மாவட்டத்திலும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மூலமாக அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு முழுவீச்சில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. நேற்று செவிலியர் உள்பட புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்தது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் 7 பெண்கள் உள்பட 9 பேரும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 6 பேரும், மொடக்குறிச்சியில் ஒருவரும் ஆவர். ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சூரியம்பாளையம், வைராபாளையம், அசோகபுரம், ராஜாஜிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

போக்குவரத்துக்கழக பணிமனை

இதற்கிடையே ஈரோடு சென்னிமலைரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் தொழில்நுட்ப ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த மாதம் ஈரோட்டில் பஸ்கள் இயக்கப்பட்டதால், டிரைவர், கண்டக்டர்கள் உள்பட ஊழியர்கள் பலர் போக்குவரத்துக்கழக பணிமனைக்கு வந்து சென்றுள்ளனர். மேலும், பஸ்களை பழுது நீக்கும் பணியும் நடந்து வந்தது.

இந்த பணியில் சுமார் 90 ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் பணி செய்து உள்ளனர். எனவே அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும், ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போக்குவரத்துக்கழக பணிமனை மூடப்பட்டது.

Next Story