புதுவையில் ஒரே நாளில் 80 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 900-ஐ தாண்டியது ஒருவர் உயிரிழப்பு
புதுச்சேரியில் ஒரே நாளில் நேற்று கொரோனாவுக்கு 80 பேர் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதித்தோர் எண்ணிக்கை 904 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்கு ஒருவர் பலியானார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா தொற்றை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
கொரோனா தொற்று
கொரோனாவின் பாதிப்பு தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தது. நீண்ட காலமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் சுகாதார துறை அதிர்ச்சிக்குள்ளானது. இதற்கு சென்னையில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தளர்வில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாநில எல்லைகள் மூடப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு ஏற்கனவே முதல்- அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
ஒரே நாளில் 80 பேருக்கு பாதிப்பு
ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தபடி இருந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை இந்த எண்ணிக்கை 824 ஆக இருந்தது. தற்போது 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளானவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.
அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 480 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதுச்சேரியில் 76 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் 2 பேர் என மொத்தம் 80 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் 40 ஆண்கள், 40 பெண்கள் ஆவார்கள். இதில் 18 வயதுக்குட்பட்டவர்கள் 4 பேரும், 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 64 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 பேர் அடங்குவர். நேற்று 21 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஒருவர் பலி
புதுவை கிருஷ்ணா நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 53 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனா சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
புதுவை மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 904 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 405 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 485 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். புதுவை மாநிலத்தில் இதுவரை 19,560 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 296 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து கொரோனா நிலவரம் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் விளக்கினார்.
Related Tags :
Next Story