மாவட்டம் முழுவதும் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை


மாவட்டம் முழுவதும் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 4 July 2020 10:40 PM GMT (Updated: 4 July 2020 10:40 PM GMT)

கோவை மாவட்டத்தில் இதுவரை 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

கோவை,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி நகர்நல ஊழியர்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா தொற்று உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு யாரும் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைத்தும், கிருமி நாசினி தெளித்தும் தடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

கட்டுப்பாட்டு மையங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கோவையில் 10 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்.

மேலும் மாவட்டத்தில் 89 ஆரம்ப சுகாதாரநிலையங்கள், 12 அரசு ஆஸ்பத்திரிகள், 2 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 10 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்பட 113 இடங்களில் அறிகுறிகளுடன் வருபவர்களின் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு சுகாதாரத்துறையினர் நேரடியாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர்.

65 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது. 645 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மருத்துவ பரிசோதனை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

தினமும் 2500 பேருக்கும் மேல் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை கோவை மாவட்டத்தில் 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story