என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து தீ விபத்து: உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்


என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து தீ விபத்து: உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
x
தினத்தந்தி 5 July 2020 4:51 AM IST (Updated: 5 July 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து தீவிபத்து நேர்ந்ததில் உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் நிவாரண தொகை வழங்கினார்.

நெய்வேலி, 

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து தீவிபத்து நேர்ந்ததில் உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் நிவாரண தொகை வழங்கினார்.

தலா ரூ.3 லட்சம்

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 2-ம் அனல் மின்நிலையத்தில் கடந்த 1-ந்தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று முன்தினம் மேலும் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதனடிப்படையில் நேற்று நெய்வேலி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய்க் கான காசோலை வழங்கப்பட்டது. இதற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். தொழில்துறை அமைச்சர் எம்.சி .சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு காசோலையை வழங்கினார்.

நிரந்தர தன்மையுடைய வேலை

அப்போது, அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், தங்களது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பை யாரும் ஈடு செய்ய முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்.எல்.சி. நிர்வாகம் இழப்பீட்டு தொகை வழங்குவதுடன், குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் நிரந்தர தன்மையுள்ள வேலை வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இறந்தால் தமிழக அரசு முதன்முறையாக தற்போது தான் இழப்பீட்டு தொகை வழங்குகிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். இதில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன் குமார், தாசில்தார் கவியரசு, குறிஞ்சிப்பாடி தாசில்தார் கீதா, கிராம நிர்வாக அலுவலர்கள், நெய்வேலி நகர அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜ், அவைத்தலைவர் வெற்றிவேல், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் என்.எல்.சி. அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க துணைத்தலைவர்கள், பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story