இன்று முழு ஊரடங்கு: சேலத்தில் காய்கறி, மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
இன்று முழு ஊரடங்கையொட்டி சேலத்தில் உள்ள காய்கறி, மளிகை கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
சேலம்,
இன்று முழு ஊரடங்கையொட்டி சேலத்தில் உள்ள காய்கறி, மளிகை கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை தளர்வுகளுடன் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அனைத்து கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க நேற்று பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைக்கு சென்றனர். சேலம் மாநகரில் உள்ள அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை தாதகாப்பட்டி ஆகிய உழவர் சந்தைகளில் நேற்று காலை வழக்கத்தைவிட ஏராளமான மக்கள் திரண்டு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் உழவர் சந்தைகளில் நேற்று ஒரே நாளில் இரு மடங்கு காய்கறிகள் விற்பனையானது.
அபராதம்
இதேபோல் தற்காலிக சந்தைகளிலும் காய்கறி வாங்க மக்கள் குவிந்தனர். மளிகை கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதே சமயம், முழு ஊரடங்கால் இறைச்சிக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று பெரும்பாலானோர் கோழி மற்றும் ஆட்டிறைச்சிகளை வாங்கி சென்றனர்.
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரு சில இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இறைச்சி மற்றும் காய்கறிகளை வாங்கி சென்றதை காண முடிந்தது. முக கவசம் அணியாமல் சென்ற பொதுமக்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தனர்.
மதுக்கடைகளில் கூட்டம்
முழு ஊரடங்கால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் இன்று மூடப்படுகின்றன. இதையறிந்த மதுபிரியர்கள் நேற்று தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். குறிப்பாக நேற்றிரவு 8 மணிக்கு அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்க மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
Related Tags :
Next Story