வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெறாமல் ஊட்டிக்கு வந்த பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு
வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெறாமல் ஊட்டிக்கு வந்த பெண் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தற்போது மண்டலங்களுக்கு இடையே மற்றும்
மாவட்டங்களுக்குள் நடைபெற்று வந்த அரசு பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ்
கட்டாயம் என்றும், இ-பாஸ் இல்லாமல் வருகிறவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து நீலகிரி மாவட்ட எல்லைகள், மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன. வாகனங்களில்
வருபவர்கள் இ-பாஸ் பெற்று வருகிறார்களா? என்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இ-பாஸ் பெறவில்லை
இந்த நிலையில் ஊட்டி அருகே மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த ராஜா(வயது 54) என்பவர் சமீபத்தில் கோவைக்கு சென்று வந்தார்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் லவ்டேல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை
நடத்தினர். விசாரணையில் ராஜா கோவையில் இருந்து ஊட்டிக்கு இ-பாஸ் பெறாமல் சரக்கு வாகனத்தில் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோன்று தேனியில் இருந்து சிவா (32), பாண்டியன் (32) ஆகிய 2 பேர், ஊட்டியில் உள்ள இரட்டை பிள்ளையார் கோவில் பகுதிக்கு
லாரியில் வந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தேனியில் இருந்து
இ-பாஸ் பெறாமல் லாரியில் மூட்டை தூக்கும் வேலைக்காக ஊட்டிக்கு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் மீது போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்குப்பதிவு
மேலும் ஊட்டி தலையாட்டுமந்து பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் கோவைக்கு சென்று இருந்தார். அரசு பஸ் இயக்கம்
நிறுத்தப்பட்டதால், அவர் ஊட்டிக்கு திரும்ப முடியாமல் இருந்தார். இதற்கிடையே கோவையில் இருந்து ஊட்டிக்கு வந்த ஒரு
வாகனத்தில் அவர் சொந்த ஊருக்கு வந்தார். ஆனால் அவர் இ-பாஸ் பெறாமல் வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில்
ஊட்டி நகர மத்திய போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்கள்,
வெளிமாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் நீலகிரிக்கு வரக்கூடாது. மீறி வந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை
எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story