மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகளில் சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு


மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகளில் சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 5 July 2020 5:11 AM IST (Updated: 5 July 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தைகள்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்டத்திலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு நடைமுறைபடுத்தப்படுகிறது.

சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சிறு கடைகள் முதல் பெரிய கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்படுகிறது. மேலும் காய்கறி சந்தை, வார சந்தை, உழவர் சந்தை, மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை கடைகள், ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சிக் கடைகளும் இன்று ஒருநாள் முழுமையாக மூடப்படும்.

வழக்குப்பதிவு

மேலும் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்படுவதோடு தேவை இல்லாமல் சாலையில் சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார். இந்த முழு ஊரடங்கில் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம். தடையை மீறி காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயணம் மேற்கொள்பவர்களோ? வாகனத்தில் வெளியே சுற்றுபவர்களோ? கண்டறியப்பட்டால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வதோடு, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இதனால் தடையை மீறி வெளியே சுற்றுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்து கொரோனா உள்ளதா? என ஆய்வு செய்யப்படும்.

எனவே முழு ஊரடங்கான இன்று மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் வாகன போக்குவரத்து, பால் விற்பனை உள்ளிட்டவைகள் மட்டும் செயல்படும். மாவட்டம் முழுவதும் ஊரடங்கை மீறும் நபர்களை கண்காணிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

எச்சரிக்கை

அதேசமயம் தடை உத்தரவை மீறி காய்கறி, மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் வருகிற 12, 19 மற்றும் 26-ந் தேதிகளிலும் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story