ஊழியர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி: அரசு அலுவலகங்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி


ஊழியர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி: அரசு அலுவலகங்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி
x
தினத்தந்தி 5 July 2020 12:06 AM GMT (Updated: 5 July 2020 12:06 AM GMT)

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அரசு அலுவலகங்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

விழுப்புரம், 

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அரசு அலுவலகங்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

5 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து, நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக பரவி வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த திண்டிவனம் பகுதி உதவி செயற்பொறியாளர் மற்றும் அலுவலக டிரைவர் ஒருவருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் 3 பேரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் 5 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிருமிநாசினி தெளிக்கும் பணி

இந்நிலையில் சுகாதாரத்துறை அறிவுரையின்படி நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் திண்டிவனத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம், ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் அவர்கள் 5 பேருடன் பணியாற்றி வந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்த பிறகே யார், யாரெல்லாம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

வட்டார வளர்ச்சிஅலுவலகம் மூடல்

ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனை தொடர்ந்து ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதோடு, அந்த அலுவலகம் மூடப்பட்டது. இதேபோல் ரோஷனை போலீஸ் நிலையத்தில் பெண் காவலருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அங்கு பணிபுரியும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Next Story