இ-பாஸ் இல்லாமல் நுழைவதை தடுக்க சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு கலெக்டர் மலர்விழி நேரில் ஆய்வு


இ-பாஸ் இல்லாமல் நுழைவதை தடுக்க சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு கலெக்டர் மலர்விழி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 5 July 2020 12:25 AM GMT (Updated: 5 July 2020 12:25 AM GMT)

இ-பாஸ் இல்லாமல் தர்மபுரி மாவட்டத்திற்குள் நுழைவதை தடுக்க மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் நேற்று தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

காரிமங்மலம்,

இ-பாஸ் இல்லாமல் தர்மபுரி மாவட்டத்திற்குள் நுழைவதை தடுக்க மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் நேற்று தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. காரிமங்கலத்தில் கலெக்டர் மலர்விழி நேரில் ஆய்வு நடத்தினார்.

வாகன சோதனை

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர், காரிமங்கலம் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகள் வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நேற்று அதிகரித்தது.

இதையடுத்து இ-பாஸ் இல்லாமல் தர்மபுரி மாவட்டத்திற்குள் வாகனங்களில் நுழைவதை தடுக்க போலீசார் மற்றும் மருத்துவத்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களில் வருபவர்கள் முறையாக இ-பாஸ் பெற்று உள்ளார்களா? என்பது தொடர்பான விவரங்களை சரிபார்த்தனர்.

கலெக்டர் ஆய்வு

சோதனைச்சாவடிகளுக்கு வந்த வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இ-பாஸ் பெறாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த நிலையில் காரிமங்கலம் பகுதியில் தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் கலெக்டர் மலர்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர். வாகனங்களில் வருவோருக்கு நடத்தப்படும் உடல் வெப்பநிலை தொடர்பான பரிசோதனையையும் பார்வையிட்டனர்.

Next Story