கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட பெண் களப்பணியாளரிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் ஏட்டு


கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட பெண் களப்பணியாளரிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் ஏட்டு
x
தினத்தந்தி 5 July 2020 6:26 AM IST (Updated: 5 July 2020 6:26 AM IST)
t-max-icont-min-icon

கொருக்குப்பேட்டை பகுதியில் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட பெண் களப்பணியாளரிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

பெரம்பூர், 

சென்னை ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ஜோசப் (வயது 45). இவர், நேற்று காலை கொருக்குப்பேட்டை அண்ணா நகர் 6-வது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 20 வயது பெண் களப்பணியாளர் ஒருவரிடம், தனது செல்போன் எண்ணை கொடுத்தார்.

மேலும் அந்த பெண்ணின் செல்போன் எண்ணையும் பெற்றுக்கொண்ட அவர், அந்த பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதுடன், தன்னிடம் அடிக்கடி செல்போனில் பேசும்படி தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியான அந்த பெண், அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக ஊழியர்கள், தங்களின் மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆயுதப்படைக்கு மாற்றம்

இதையடுத்து ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் ஜுலியஸ் சீசர், போலீஸ் ஏட்டு ஜோசப்பிடம் விசாரணை நடத்தினார். பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணிடமும் விசாரணை நடத்தியதில் ஏட்டு ஜோசப், அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியது உறுதியானது. இதையடுத்து போலீஸ் ஏட்டு ஜோசப், நேற்று மாலையே ஆயுதபடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

குடும்ப கஷ்டம் காரணமாக உயிரையும் பணயம் வைத்து கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு ஆபாசமாக பேசிய சம்பவம் கொரோனா கணக்கெடுப்பு பெண் களப்பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story