கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கை மதுரையில் மேலும் ஒருவாரம் முழு ஊரடங்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு


கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கை மதுரையில் மேலும் ஒருவாரம் முழு ஊரடங்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 5 July 2020 7:56 AM IST (Updated: 5 July 2020 7:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கையாக மதுரையில் வருகிற 12-ந் தேதி வரை மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

மதுரையில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

முழு ஊரடங்கு

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடந்த ஜூன் 24-ந் தேதியன்று அதிகாலை 12 மணி முதல் 5-ந் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி வரை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

12-ந் தேதிவரை நீட்டிப்பு

இந்த முழு ஊரடங்கின்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், கொரோனா நோய்த் தொற்றை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முழு ஊரடங்கை மதுரை மாவட்டத்தில் அதே பகுதிகளில் மேலும் 7 நாட்களுக்கு, அதாவது 6-ந் தேதி (நாளை) அதிகாலை 12 மணி முதல் 12-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்படமாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

முககவசம் கட்டாயம்

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.

அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஒத்துழைப்பு

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

Next Story