வேகமாக பரவும் கொரோனா: தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் ஊராட்சி நிர்வாகம்


வேகமாக பரவும் கொரோனா:   தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் ஊராட்சி நிர்வாகம்
x
தினத்தந்தி 5 July 2020 8:34 AM IST (Updated: 5 July 2020 8:34 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி ஒன்றிய பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஊராட்சி நிர்வாகங்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சிவகாசி, 

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் மூலம் ஆரம்பத்தில் கொரோனா பரவி வந்த நிலையில் தற்போது உள்ளூர் மக்களின் விதிமீறலால் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ் அனைத்து ஊராட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிவகாசி ஆனையூர் பஞ்சாத்துக்கு உட்பட்ட கட்டளைப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த கிராமத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார தூய்மைகாவலர்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டது.

சிறப்பு முகாம்

இதேபோல் தேவர்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதை பஞ்சாயத்து தலைவர் முத்துவள்ளிமச்சக்காளை நேரில் ஆய்வு செய்தார்.

ஆனைக்குட்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ் முன்னிலையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பஞ்சாயத்தில் பணியாற்றி வரும் தூய்மை காவலர்களுக்கு வடமலாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் முத்துசாய்ராம் தலைமையில் மருத்துவக்குழுவினர் சிறப்பு முகாமிட்டு காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.

சிவகாசி நகராட்சி

விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதியை ஆய்வு செய்த பஞ்சாயத்து தலைவர் நாகராஜ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவகாசி ஒன்றிய பகுதியில் கொரோனா பரவலை தடுக்க பஞ்சாயத்து நிர்வாகங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவது போல் சிவகாசி நகராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்க நகராட்சி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

பாதிப்பு எண்ணிக்கை

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தான் தினமும் அதிகளவில் பாதிப்பு எண்ணிக்கை வருகிறது. நேற்று சிவகாசியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் முழு வீச்சில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Next Story