ரேஷன் கடைகளில் ஜூலை மாத பொருட்கள் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுப்பார் அமைச்சர் காமராஜ் பேட்டி
ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான பொருட்கள் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் காமராஜ் கூறினார்
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட கலெக்டர்் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ள போலீஸ் துறை மற்றும் மருத்துவ துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆனந்த் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு கபசுர குடிநீர், முக கவசம், கையுறை, கிருமிநாசினி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், உதவி கலெக்டர் ஜெயபிரீத்தா, கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன், கலியபெருமாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் நன்றி கூறினார்.
பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
தமிழகத்தை பொறுத்தவரை முதல்-அமைச்சரின் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் இறப்பு சதவீதம் மிக மிக குறைவாக உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள காவல் துறை, மருத்துவ துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களின் பணி மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த பணியினை அதே உத்வேகத்தோடு தொடர்ந்து செய்திட வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கைகளை 20 நொடி அடிக்கடி கழுவி கொள்ள வேண்டும். எங்கு சென்றாலும் 1 மீட்டர் இடைவெளி விட்டு சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும். பொதுமக்களும் தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
ஜூலை மாத ரேஷன் பொருட்கள்
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்குரிய அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும் எனவும், அதற்குரிய டோக்கன் நாளை(6-ந் தேதி) முதல் 9-ந் தேதி வரை அவரவர் வீடுகளிலேயே நேரடியாக சென்று டோக்கன் வழங்கப்படும் எனவும், வருகிற 10-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதில் கடந்த 3-ந் தேதி வரை குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பணம் கொடுத்து ரேஷன் பொருட்களை வாங்கி உள்ள நிலையில், அவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது குறித்து முதல்-அமைச்சர்் முடிவெடுப்பார். வழக்கமான நடைமுறைகளையும், மத்திய அரசின் வழிகாட்டுதலையும் பின்பற்றி தமிழக அரசு பருத்தியை கொள்முதல்் செய்து வருகிறது. இதில் எது சாத்தியமோ, அதன்படி கொள்முதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் ஆதாயம் தேட முயற்சி
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருவதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளாரே என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அவர் தினமும் அறிக்கைகள் வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார். தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதுகாப்பதில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.
தமிழக போலீஸ் துறை சிறப்பாக செயல்படவில்லை என கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்து இருப்பது குறித்த மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு சில சம்பவங்களை வைத்து போலீஸ் துறையை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானது தமிழக போலீஸ் என்பதை கமல்ஹாசனுக்கு தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
Related Tags :
Next Story