நொய்யலாற்றில் சாயக்கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


நொய்யலாற்றில் சாயக்கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா?   சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 5 July 2020 5:58 AM GMT (Updated: 2020-07-05T11:28:33+05:30)

நொய்யலாற்றில் சாயக்கழிவுநீர் கலப்பது தடுக்கப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருப்பூர், 

மேற்குதொடர்ச்சி மலைகளில் உள்ள சிறு, சிறு ஊற்றுகள் மூலம் உருவாகி 3 மாவட்ட எல்லைகளைக் கடந்து நதியாக உருமாறி பாய்கிறது நொய்யலாறு. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் பாய்ந்து செல்லும் இந்த நொய்யல் ஆறு கரூர் அருகே நொய்யல் என்கிற கிராமத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

முந்தைய காலங்களில் இந்த நொய்யலாறு இப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்காகவும் பெருமளவில் பயன்பட்டது. நாளடைவில் இந்த நதியில் கலந்த கழிவுகளால் முற்றிலும் மாசடைந்து பாழானது. தொடக்கத்தில் கோவை மாவட்ட கழிவுகளை சுமந்து வந்த நொய்யல் ஆறு அடுத்ததாக திருப்பூர் சாய ஆலைகளின் கழிவுகள் கலந்ததாலும் எதற்கும் பயனற்ற நிலைக்கு உருமாறியது.

சாயக்கழிவுநீர்

இந்த நொய்யலில் கலந்த கழிவுநீர், குப்பை மற்றும் சாயக்கழிவுகளால் இந்த ஆறு மட்டுமின்றி இதிலிருந்து நீர்பெற்ற குளங்களும் முற்றிலும் பாலானது. நிலத்தடி நீரையும் இந்த சாயக்கழிவுகள் மாசடையச்செய்தது. எனவே தற்போது இந்த நொய்யல்ஆறு குடிநீருக்கு மட்டுமின்றி விவசாய பாசனத்திற்கும் பயன்படாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில், தற்போது திருப்பூர் பகுதியில் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தற்போது சாயக்கழிவுகள் கலப்பது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சிலர் விதிமுறைகளை மீறி நொய்யலில் சாயக்கழிவுநீர் மற்றும் கழிவுநீரை திறந்து விடும் செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் திருப்பூர் நகரின் கழிவுகள் அனைத்தும் நொய்யலில் கலக்கும் விதமாக உள்ளது. அதேபோல் நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டியும் அசுத்தப்படுத்தி வருகின்றனர்.

சீரமைக்கப்படுமா?

அதேபோல் அரசால் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு வருடங்கள் கடந்த நிலையில் நொய்யல் ஆறு தற்போது வரை பிளாஸ்டிக் கழிவுகளால் சூழ்ந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது. மேலும், நொய்யல் ஆற்றில் பல இடங்களில் காடுபோல் வளர்ந்துள்ள முட்புதர்களும் நொய்யலைஅழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கிறது.

இந்த முட்புதரில் சமூக விரோத செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் ‘இறந்த நதி’ என பெயர் சூட்டப்பட்ட இந்த நொய்யல் ஆற்றை சீரமைக்க வேண்டும், மீண்டும் இந்த நொய்யலாறு இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story