முழு ஊரடங்கு எதிரொலி: பெட்ரோல் போடுவதற்காக அணி வகுத்து நின்ற வாகன ஓட்டிகள்
பெட்ரோல்- டீசல் போடுவதற்கு வாகன ஓட்டிகள் அணி வகுத்து நின்றன.
பெரம்பலூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் இந்த (ஜூலை) மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த மாதத்திற்கான முதல் முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. முழு ஊரடங்கில் பால் விற்பனை, மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவை மட்டுமே செயல்படும் என்பதால், நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் காய்கறி கடைகள் மளிகை கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஊரடங்கில் பெட்ரோல் விற்பனை நிலையங்களும் இயங்காததால், நேற்று பெட்ரோல்- டீசல் போடுவதற்கு வாகன ஓட்டிகள் அணி வகுத்து நின்றன. டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. முழு ஊரடங்கில் கடைகளை திறந்து வியாபாரம் செய்வோரின் கடைகளுக்கு ‘சீல்’ வைத்து, குற்றவழக்கு பதிவு செய்யப்படும். தேவையின்றி வெளியில் சுற்றித்திரிவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, குற்ற வழக்கும் பதிவு செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அரசு பணி நிமித்தமாக செல்லும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் இருக்க போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story