விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை டி.ஐ.ஜி. கே.எழிலரசன் உத்தரவு


விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை டி.ஐ.ஜி. கே.எழிலரசன் உத்தரவு
x
தினத்தந்தி 6 July 2020 4:13 AM IST (Updated: 6 July 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் பணிக்கு போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதித்து டி.ஐ.ஜி. கே.எழிலரசன் உத்தரவிட்டு உள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் பணிக்கு போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதித்து டி.ஐ.ஜி. கே.எழிலரசன் உத்தரவிட்டு உள்ளார்.

போலீஸ் நண்பர்கள் குழு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடைக்காரர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் தாக்குதலில் பலியானார்கள். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும், வியாபாரிகளை போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தியபோது, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எனப்படும் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து போலீஸ் நண்பர்கள் குழுவை போலீசார் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

தடை

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில சமூக விரோத சம்பவங்களில் சில போலீஸ் நண்பர்கள் குழுவினர் ஈடுபட்டு உள்ளதாகவும் புகார் வந்த வண்ணம் உள்ளது. இதன் எதிரொலியாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் போலீசாரின் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், அவர்கள் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. கே.எழிலரசன் வாக்கி-டாக்கி மூலமாக நேற்று போலீசாருக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

நேரடி பணிக்கு வேண்டாம்

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவினர் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்கள் இனி எந்தவொரு போலீஸ் நிலையங்களுக்கும் வரக்கூடாது. போலீசாருடன் இணைந்து பொதுமக்களின் சேவைக்காக மட்டும் பணியாற்றினால் போதும்.

நேரடியாக காவல் பணிக்கு உதவி செய்ய வேண்டியதில்லை. இதற்கு பதிலாக ஊர்க்காவல் படையினர், முன்னாள் படைவீரர்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். காவல் பணிக்காக அதாவது போக்குவரத்தை சீர்செய்யும் பணி, பாதுகாப்பு பணி, சாராய வேட்டைக்கு போகுதல், இரவு ரோந்து பணி உள்ளிட்ட எந்த ஒரு காவல் பணிக்கும் உதவி செய்ய போலீஸ் நண்பர்கள் குழுவினரை போலீசார் பயன்படுத்தக்கூடாது.

துறைரீதியாக நடவடிக்கை

மக்களின் நன்மைக்காகவும், காவல்துறை மூலம் செய்யப்படும் சமுதாய சேவை பணிக்காகவும் மட்டுமே இனி போலீஸ் நண்பர்கள் குழுவினர் ஈடுபடுத்தப்படுவார்கள். மறைமுகமாக அவர்களை போலீஸ் பணிக்கு பயன் படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் தங்களது வாகனங்களில் போலீஸ் என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டக்கூடாது.

இவ்வாறு டி.ஐ.ஜி. கே.எழிலரசன் கூறினார்.

Next Story