கொரோனா தடுப்பு நடவடிக்கை: முழு ஊரடங்கால் கோவை வெறிச்சோடியது


கொரோனா தடுப்பு நடவடிக்கை:   முழு ஊரடங்கால் கோவை வெறிச்சோடியது
x
தினத்தந்தி 5 July 2020 11:06 PM GMT (Updated: 5 July 2020 11:06 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் கடைகள் அடைக்கப்பட்டன, தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. இதனால் கோவை வெறிச்சோடியது.

கோவை,

கொரோனா பரவலை தடுக்க வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக இந்த மாதம் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கோவையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதன் காரணமாக கோவையில் உள்ள மளிகை கடைகள், மார்க்கெட்டுகள், மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள், டீ கடைகள், ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், செல்போன் விற்பனை கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. கோவை மாவட்டத்தில் 250 பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டன. இதனால் பெட்ரோல் நிரப்ப முடியாமல் ஒரு சிலர் வாகனங்களில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வெறிச்சோடியது

எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால், வெறைட்டிஹால் ரோடு, அவினாசிரோடு, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகள் காலை முதல் வாகனங்கள் செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கினால் பொதுமக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

அத்தியாவசிய தேவைகளான மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள், பால் பூத்கள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. இந்த பால் பூத்களுக்கு அதிகாலையிலேயே பொதுமக்கள் சென்று தேவையான அளவுக்கு பால் பாக்கெட்டுகளை வாங்கிச்சென்றனர். வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் கோவை நகரம் வெறிச்சோடியது.

தொழிற்சாலைகள் மூடல்

ஏற்கனவே வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கும். சில அத்தியாவசிய தொழிற்சாலைகள் மட்டும் திறந்து இருக்கும். நேற்று அந்த தொழிற்சாலைகளும் மூடப்பட்டு இருந்தன. இதேப்போல தனியார் மில்கள், பவுண்டரி நிறுவனங் கள், உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள், வேன்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயங்க வில்லை.

தடையை மீறி வெளியில் சுற்றுபவர்களை கண்காணித்து தடுக்க கோவை மாநகர பகுதியில் 8 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர 1000-க்கும் மேலான போலீசார் நகரில் உள்ள முக்கிய வீதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

3,500 போலீசார்

ஏற்கனவே வெளி மாவட்டங்களில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வருபவர்களை கண்காணிப்பதற்காக 14 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் 54 சோதனைச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வழியாக தேவையின்றி வருபவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினார்கள்.

இதுதவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கு 54 தோள்பட்டை கேமராக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனங்களில் வருபவர்களை பிடித்து போலீசார் விளக்கம் கேட்டனர்.

அத்தியாவசிய காரணம் இல்லாமல் வெளியில் சுற்றி திரிந்தது தெரியவந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கோவையில் முழு ஊரடங்கு அமைதியான முறையிலும், பொதுமக்களின் ஒத்துழைப்புடனும் நடைபெற்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருமி நாசினி தெளிப்பு

மேலும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியதால், கொரோனா பாதிப்பு உள்ளான பகுதிகளில் இருக்கும் சாலைகளில் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அத்துடன் அங்கு பிளச்சிங் பவுடரும் போடப்பட்டது.

மேட்டுப்பாளையம் பஸ் நிலையம், வணிக வளாகம் ஊட்டி பிரதான சாலை மற்றும் நகரிலுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. காந்தி மைதானத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகள், அன்னூர் சாலையில் உள்ள புதிய காய்கறி மார்க்கெட்டுகளும் மூடி இருந்தது. மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு நுழைவு வாயிலாக விளங்கிவரும் பவானி ஆற்றுப் பாலம் மற்றும் மற்றும் பிரதான சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

பஸ் நிலையமும் வெறிச்சோடி காணப்பட்டது. போக்குவரத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் பங்களாமேடு ஆறு முனை சந்திப்பு மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் காரணம் இல்லாமல் வாகனங்களில் சுற்றியவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தனர்.

Next Story