முழு ஊரடங்கிலும் முடங்காத சேவை: குப்பைகளை சேகரிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் தீவிரம்
ஊட்டியில் முழு ஊரடங்கிலும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் தீவிரம் காட்டினர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 22 ஆயிரம் வீடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இது தவிர ஒட்டல்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள், கடைகள், உள்ளது. இங்கு சேகரமாகும் குப்பைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரமாக்கப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சியில் ஒரு நாளைக்கு 30 டன்னுக்கு மேற்பட்ட குப்பைகள் சேகரமானது. ஊரடங்கு உத்தரவால் தங்கும் விடுதிகள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் குப்பைகள் சேகரமாவது குறைந்தது. ஊட்டியில் சேகரமாகும் குப்பைகள் தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வார்டு வாரியாக...
இந்த நிலையில் நேற்று கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. முழு ஊரடங்கிலும் ஊட்டி நகராட்சி தூய்மை பணியாளர்கள் வார்டு வாரியாக வாகனங்களில் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசில் அடித்த பின்னர் மக்கள் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவார்கள். தற்போது வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஆடியோ ஒலிபெருக்கியில் போடப்பட்டு வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
கிருமி நாசினி தெளிப்பு
ஊட்டியில் நேற்று சாரல் மழை பெய்தது. இதை பொருட்படுத்தாமல் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்தனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகள் மற்றும் வெளிப்புற கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டு இருந்ததால் குப்பைகள் இன்று (திங்கட்கிழமை) சேகரிக்கப்படுகிறது. முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் ஊட்டி நகரில் முக்கிய சாலைகளில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு முழு பாதுகாப்பு கவச உடைகள், கையுறைகள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். முழு ஊரடங்கிலும் முடங்காத அவர்களது சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story