ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு
ஊரடங்கால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜூலை.
ஊரடங்கால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பல கட்டுப்பாடுகளுடன் அமலில் உள்ளது.
இந்த நிலையில் இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகரத்தில் நேற்று வணிக நிறுவனங்கள், உணவகங்கள், டீக்கடைகள், சலூன் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் மொத்த காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட்டும் மூடப்பட்டது. வழக்கமாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள்.
வெறிச்சோடி காணப்பட்டது
நேற்று இறைச்சி கடைகளும் மூடப்பட்டதால் பெரும்பாலான வீடுகளில் சைவ உணவுகளே சமைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் நிலையங்களும் மூடப்பட்டன. மருந்து கடைகள், மருத்துவமனைகள் மட்டும் திறந்திருந்தது.
திருவண்ணாமலை நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ரோந்து பணி மேற்கொண்டார். மேலும் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். சில இடங்களில் போலீசார் அபராதம் விதித்தனர். ஊரங்கு காரணமாக திருவண்ணாமலை நகரமே மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆரணி
கீழ்பென்னாத்தூரில் முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. திருவண்ணாமலை-சென்னை தேசிய நெடுஞ்சாலை, அவலூர்பேட்டை ரோடு, வேட்டவலம் ரோடு போன்ற சாலைககள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆரணியில் முழு ஊரடங்கால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் காந்திரோடு, மண்டிவீதி, மார்க்கெட் ரோடு, பெரியக்கடைவீதி, அருணகிரிசத்திரம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பெட்ரோல் பங்குகள், ஓட்டல்கள், பழம், பூ, காய்கறி, இறைச்சி ஆகிய கடைகளும் மூடப்பட்டு இருந்தன. சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
போளூர்
போளூரில் ஊரடங்கால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.
போளூர் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
செங்கம்
செங்கத்தில் ஊரடங்கால் துக்காப்பேட்டை, மெயின் ரோடு, பஜார் வீதி, ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, மில்லத் நகர், தளவாநாயகன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல கண்ணமங்கலம், சேத்துப்பட்டு, வந்தவாசி, செய்யாறு, கலசபாக்கம், தூசி, தெள்ளார், வாணாபுரம் மற்றும் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story