ஜோலார்பேட்டை அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனைவி ஆத்திரம்
மதுகுடிக்க பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவரின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
ஜூலை.
மதுகுடிக்க பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவரின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
கணவன்-மனைவி தகராறு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூரை சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் வெங்கடேசன் (வயது 30), கூலித்தொழிலாளி. இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுகந்தி (26) என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் சரியாக வேலைக்குச் செல்லாமல் தொடர்ந்து மது குடித்து விட்டு சுற்றித்திரிந்தார். அவரின் நடவடிக்கையை சுகந்தி கண்டித்தார்.
வெங்கடேசன் அடிக்கடி மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் 3-ந்தேதி காலை வெங்கடேசன் சுகந்தியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வெளியில் சென்ற வெங்கடேசன் குடித்து விட்டு போதையில் அங்குள்ள சாலையில் விழுந்து கிடந்தார்.
கல்லை தூக்கி போட்டார்
அவரை பார்த்த அப்பகுதி மக்கள் மனைவியிடம் கூறினர். ஆத்திரம் அடைந்த சுகந்தி, வெங்கடேசனை வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டுக்கு வந்ததும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வெங்கடேசன் தனது மனைவியை தாக்க முயன்று, அருகில் கிடந்த கருங்கல்லை சுகந்தி மீது வீச முயன்றார்.
அதைத் தடுத்த சுகந்தி கணவரை தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளினார். கணவர் தன் மீது வீச முயன்ற அதே கல்லை தூக்கி வெங்கடேசனின் தலை மீது போட்டதால், தலை சிதைந்த நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு போதிய சிகிச்சை அளித்து, பின்னர் சேலத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்தார்.
மனைவி கைது
இதுபற்றி வெங்கடேசனின் தாயார் பருவதம் ஜோலார்பேட்டை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சுகந்தியை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story