தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டு பலியான மூதாட்டியின் பரிசோதனை முடிவை வெளியிடுவதில் குளறுபடி


தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டு பலியான மூதாட்டியின் பரிசோதனை முடிவை வெளியிடுவதில் குளறுபடி
x
தினத்தந்தி 6 July 2020 6:27 AM IST (Updated: 6 July 2020 6:27 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவை வெளியிடுவதில் குளறுபடி ஏற்பட்டது.

தேனி,

தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி காய்ச்சல், சளி பாதிப்பு காரணமாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்கு சென்றார். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் பரிசோதனை முடிவு வரும் முன்பே கடந்த 3-ந்தேதி அவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் காலையில் வெளியான பரிசோதனை முடிவில் அந்த மூதாட்டிக்கும், அவருடைய மகன், பேரன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால், சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த தகவலை மறுத்தனர். உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்ட நிர்வாகம் அந்த மூதாட்டி கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக நேற்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து குளறுபடி ஏற்பட்டு வருகிறது. இது கொரோனா அச்சத்தில் உள்ள மக்களை மேலும் பீதி அடைய செய்கிறது.

Next Story