கூடல்புதூரில் வீடு புகுந்து 31 பவுன் நகை திருட்டு தொடர் சம்பவங்களால் மக்கள் பீதி
மதுரை கூடல்புதூரில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புகுந்து 31 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடி சென்றனர்.
மதுரை,
மதுரை கூடல்புதூர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே வீடு புகுந்து பணம், நகை திருட்டு போகும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூடல்புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 பவுன் நகை, ரூ.27 ஆயிரம் திருட்டு போனது. இதுபோல் 3 தினங்களுக்கு முன்பு ரூ.70 ஆயிரம் ரொக்கமும், 2 தினங்களுக்கு முன்பு ரூ.60 ஆயிரம் ரொக்கமும் திருட்டு போனது. இதுதொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கூடல்புதூர் புதுவிளாங்குடி பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன்(வயது 43). இவர் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் புகுந்து வீட்டில் பீரோவில் இருந்த 31 பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருடர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பீதியில் மக்கள்
மதுரை நகர் பகுதியில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது ஒரே காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து 4 சம்பவங்கள் நடந்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே போலீசார் அந்த பகுதியில் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story