கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு முதியவர் பலி புதிதாக 4 பேருக்கு தொற்று


கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு முதியவர் பலி புதிதாக 4 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 6 July 2020 10:51 AM IST (Updated: 6 July 2020 10:51 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அரசு மருத்துவமனையில், முதியவர் கொரோனாவிற்கு பரிதாபமாக இறந்தார். மேலும், புதிதாக 4 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர், 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த 67 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல் மற்றும் லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த முதியவர் கடந்த 25-ந்தேதி கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சளி, ரத்தம் எடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததால், உடல்நிலை தேறி வந்தார். இந்தநிலையில், கடந்த 2 நாட்களாக முதியவருக்கு உடல்நிலை மோசமாகியது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

புதிதாக 4 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டம் மேலபட்டியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவருக்கும், காதப்பாறையை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவருக்கும், பாகநத்தம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஆண் ஒருவருக்கும், வெள்ளியனை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஆண் ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது கரூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story