கீழ்வேளூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


கீழ்வேளூர் அருகே   ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
x
தினத்தந்தி 6 July 2020 6:08 AM GMT (Updated: 2020-07-06T11:38:09+05:30)

கீழ்வேளூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

சிக்கல், 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தக்குடி கிராமம் திருப்பஞ்சனம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய வீட்டுக்கு அருகே புன்செய் நிலத்தில் குளம் வெட்டும் பணி நடந்தது. அப்போது நிலத்துக்கடியில் மண்பானையின் உடைந்த பாகங்கள் கிடைத்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தேவூர் வருவாய் ஆய்வாளர் கேசவன், கிராம நிர்வாக அதிகாரி செல்வேந்திரன் ஆகியோர் அங்கு சென்று மண் பானையின் உடைந்த பாகங்கள் கிடைத்த பகுதியை நேரில் பார்வையிட்டு, இதுதொடர்பாக கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயனுக்கு அறிக்கை அனுப்பினர்.

இதையடுத்து தாசில்தார் தொல்லியல் துறைக்கு கடிதம் அனுப்பி மண்பானைகள் குறித்து ஆய்வு நடத்தும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தாசில்தார் கார்த்திகேயன், மண்டல துணை தாசில்தார் ஜெயகுமார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பழங்கால பொருட்கள் புதைந்துள்ளதா? என்பதை கண்டறிவதற்காக நிலத்தை தோண்டினர்.

முதுமக்கள் தாழி

இதில் அங்கு பழங்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. அதன் வாய் பகுதி சேதம் அடைந்து காணப்பட்டது. மேலும் அங்கு மண் கலயங்களும், மனித எலும்புக்கூட்டின் சிதைந்த பாகங்களும் கிடைத்தன. முதுமக்கள் தாழி சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து நாகை மாவட்ட தொல்லியல் துறை காப்பாட்சியர் பரத்ராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், தொல்லியல் துறையின் முழுமையான ஆய்வுக்கு பிறகு முதுமக்கள் தாழி குறித்த மேலும் விவரங்கள் தெரியவரும் என்றும் தாசில்தார் கார்த்திகேயன் கூறினார். நிலத்துக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Next Story