ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் நெசவாளர்கள் சம்மான் திட்டம் எடியூரப்பா தொடங்கி வைத்தார்


ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் நெசவாளர்கள் சம்மான் திட்டம் எடியூரப்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 July 2020 12:00 AM GMT (Updated: 2020-07-06T22:53:09+05:30)

ஏழை நெசவாளர்கள் பயன்பெறும்வகையில் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் நெசவாளர் சம்மான் திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தொடக்க விழா

இதனால் கட்டிட தொழிலாளர்கள், வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்டோர் வாழ்வாதரங்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதையொட்டி அவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,610 கோடியில் சிறப்பு திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். அதில் நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தும் நெசவாளர் சம்மான் திட்டமும் ஒன்று.

பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நெசவாளர்கள் சம்மான் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு, அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

19 ஆயிரம் பேர்

விழாவில் அவர் பேசியதாவது:-

நெசவாளர்கள் சம்மான் திட்டத்தில் நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை இன்று (அதாவது நேற்று) தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம் முதல்கட்டமாக 19 ஆயிரத்து 744 நெசவாளர்கள் பயன்பெறுகிறார்கள். கர்நாடகத்தில் மொத்தம் 54 ஆயிரத்து 789 கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.

கர்நாடகத்தில் பட்டு, பருத்தி நூல்களை நெய்யும் நெசவாளர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள். இந்த திட்டத்திற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10.96 கோடி செலவாகும். நெசவாளர்கள் கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் இருந்தால், அத்தகையவர்களுக்கும் இந்த திட்டத்தின் பலனை வழங்க அரசு தயாராக உள்ளது.

உதவித்தொகை

இதுவரை 40 ஆயிரத்து 634 நெசவாளர்கள் சேவாசிந்து இணையதள பக்கம் மூலம் பதிவு செய்து உள்ளனர். இதில் 37 ஆயிரத்து 314 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளன. விசைத்தறியில் பணியாற்றி வரும் கூலித்தொழிலாளர்கள் 1.25 லட்சம் பேருக்கு ஒரு முறை உதவியாக ரூ.2,000 வழங்க அரசு முடிவு செய்து அறிவித்தது. இதில் இதுவரை 8,897 பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த விழாவில் ஜவுளித்துறை மந்திரி ஸ்ரீமந்த் பட்டீல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story