கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு: தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து உள்ளார்.
பெங்களூரு,
கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்து உள்ளார்.
யாரும் நம்ப வேண்டாம்
முன்னாள் துணை பிரதமர் பாபுஜெகஜீவன்ராம் நினைவு தினத்தையொடடி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்தரி எடியூரப்பா நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல் வெறும் வதந்தி. இத்தகைய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். கொரோனாவை தடுக்கும் பணிகளில் மாநில அரசு எங்கும் தோல்வி அடையவில்லை. தேவையான அனைத்துவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
பழகிக்கொள்ள வேண்டும்
பொதுமக்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும். பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியை உருவாக்கியுள்ளோம். 450 ஆம்புலன்ஸ் வாகனங்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம். கொரோனா பரவல் அதிகமாவதால் பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை.
பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது முக்கியம் என்பதால், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாதவை ஆகும்.
ஆவணங்களை வழங்க...
பிரதமர் மோடியும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு உபகரணங்களை கொள்முதல் செய்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இதில் முறைகேடு நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சித்தராமையா ஆவணங்களை வைத்துக் கொண்டு பேச வேண்டும். தேவைப்பட்டால் ஆவணங்களை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆவணங்கள் இன்றி முறைகேடு குற்றச்சாட்டை சுமத்துவது சரியல்ல. சித்தராமையாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கக்கூடாது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டியதாயிற்று. சட்டசபை கூட்டத்தில் அவர் முறைகேடு குறித்து பேசட்டும். அதற்கு நாங்கள் உரிய பதிலளிக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story