கொரோனா பாதித்தோருக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தல்
கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.
புதுச்சேரி,
கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.
அதிகரிக்கும் தொற்று
புதுவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர், பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் இதுவரை 1009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 480 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 515 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள்
இதையடுத்து புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளுடன் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், கலெக்டர் அருண், முதல்-அமைச்சரின் செயலர் விக்ராந்த் ராஜா, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதியை தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொற்று அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களின் நிலை குறித்த விவரங்களை உடனுக்குடன் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story