லாஸ்பேட்டை கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு


லாஸ்பேட்டை கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 7 July 2020 3:30 AM IST (Updated: 7 July 2020 1:48 AM IST)
t-max-icont-min-icon

லாஸ்பேட்டையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் பூட்டப்பட்ட வீட்டிற்குள் புகுந்து 4 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

புதுச்சேரி, 

லாஸ்பேட்டையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் பூட்டப்பட்ட வீட்டிற்குள் புகுந்து 4 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கட்டுப்பாட்டு மண்டலம்

லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வீரசெல்வம் (வயது40). இவர் காந்தி வீதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மாடி வீட்டில் வசித்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவர்கள் வசித்து வந்த பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. எனவே வீரசெல்வம் வீட்டை சுற்றி தடுப்பு வேலி அமைத்து, கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டது.

துணிகர திருட்டு

இந்தநிலையில் வீரசெல்வம் தனது வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு லாஸ்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கினார். நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் யாரோ வீட்டின் கதவை உடைத்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து புகார் செய்யப்பட்டதன்பேரில் லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகை மற்றும் பணம் திருடிய மர்ம ஆசாமிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story