மகா விகாஷ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை காங்கிரஸ் மந்திரி பாலசாகேப் தோரட் சொல்கிறார்


மகா விகாஷ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை காங்கிரஸ் மந்திரி பாலசாகேப் தோரட் சொல்கிறார்
x
தினத்தந்தி 6 July 2020 10:45 PM GMT (Updated: 2020-07-07T02:35:24+05:30)

மகா விகாஷ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என காங்கிரஸ் மந்திரி பாலசாகேப் தோரட் தெரிவித்துள்ளார்.

மும்பை, 

மகா விகாஷ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என காங்கிரஸ் மந்திரி பாலசாகேப் தோரட் தெரிவித்துள்ளார்.

மகா விகாஷ் கூட்டணி

மராட்டியத்தில் கொள்கையில் முரண்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு நடந்து வருகிறது. அவ்வப்போது இந்த கூட்டணியில் உரசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது கொரோனா உள்ளிட்ட விவகாரங்களில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தங்களை கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுப்பதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மந்திரிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் திடீரென சந்தித்து பேசினார்கள்.

இந்த சூழலில், புனே மாவட்டம் பாராமதியில் பார்னர் பகுதியை சேர்ந்த சிவசேனா கவுன்சிலர்கள் 5 பேர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி துணை முதல்-மந்திரி அஜித்பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரசில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா ஆளும் கூட்டணி கட்சிகளிடையேயும், கூட்டணி அரசாங்கத்திலும் ஒருங்கிணைப்பு இல்லை என தெரிவித்து வருகிறது.

கூட்டணியில் பிளவு இல்லை

இந்தநிலையில், காங்கிரஸ் மந்திரி பாலசாகேப் தோரட் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

மகா விகாஷ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. சிலர் நாங்கள் சண்டையிட்டு கொள்வோம் என காத்து இருக்கிறார்கள். அதற்கான பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் எதுவும் நடக்காது. இந்த கூட்டணி வலுவானது. ஒன்றுபட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தின் 3 அங்கங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story