மார்த்தாண்டம் பகுதியில் 3 மீன் சந்தைகள் மூடப்பட்டன கொரோனா பரவியதால் அதிகாரிகள் நடவடிக்கை


மார்த்தாண்டம் பகுதியில் 3 மீன் சந்தைகள் மூடப்பட்டன கொரோனா பரவியதால் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 July 2020 10:45 PM GMT (Updated: 2020-07-07T03:03:17+05:30)

மார்த்தாண்டம் மீன் சந்தையில் வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அதன் அருகே உள்ள 3 மீன் சந்தைகள், அதிகாரிகள் நடவடிக்கையின் பேரில் மூடப்பட்டன.

குழித்துறை, 

மார்த்தாண்டம் மீன் சந்தையில் வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அதன் அருகே உள்ள 3 மீன் சந்தைகள், அதிகாரிகள் நடவடிக்கையின் பேரில் மூடப்பட்டன.

வியாபாரிக்கு கொரோனா

மார்த்தாண்டத்தில் குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான மீன், காய்கறி சந்தை உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் காய்கறி சந்தை தற்காலிகமாக மார்த்தாண்டம் பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அத்துடன் நவீன முறையில் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வந்த மீன்சந்தையும் மூடப்பட்டு, பக்கத்தில் உள்ள லாரி பேட்டையில் தற்காலிகமாக மீன் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த சந்தையில் நந்தன்காடு பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் மீன் விற்று வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகள் நந்தன்காடு பகுதிக்கு சென்று மீன் வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து சளி மாதிரிகளை சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில், மீன் வியாபாரிக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

3 மீன் சந்தைகள் மூடப்பட்டன

மார்த்தாண்டம் மீன் சந்தைக்கு நல்லூர், உண்ணாமலைக்கடை பேரூராட்சிகள், கொல்லஞ்சி ஊராட்சி மற்றும் குழித்துறை நகராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் மீன் வாங்க வருவார்கள். வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தநிலையில் உண்ணாமலைக்கடை பேரூராட்சி பகுதியிலும், மார்த்தாண்டம் மீன் சந்தையோடு தொடர்பில் உள்ளவர்கள் மீன் விற்பதால், உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உள்பட்ட சாங்கை, மாமூட்டுக்கடை, விரிகோடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மீன் மற்றும் காய்கறி விற்பனை செய்யும் சிறிய சந்தைகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து சாங்கை, மாமூட்டுக்கடை, விரிகோடு ஆகிய 3 சந்தைகளிலும் கம்புகள் வைத்து அடைத்து, மீன் விற்க தடை விதித்து, அறிவிப்பும் வைத்துள்ளனர். இதனால் இந்த 3 சந்தைகளிலும் நேற்று மீன் மற்றும் காய்கறி விற்பனை நடைபெறவில்லை.

அதே சமயம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வியாபாரி மீன் விற்பனை செய்த மார்த்தாண்டம் லாரி பேட்டையில் உள்ள தற்காலிக மீன் சந்தை மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒருவருக்கு தொற்று

பாகோடு பேரூராட்சிக்கு உள்பட்ட ஐம்பழஞ்சி, புளிச்சிமாவிளையை சேர்ந்த 31 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து, பிளச்சிங் பவுடர் தூவி கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

Next Story