ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 288 ஆக உயர்வு


ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 288 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 July 2020 4:15 AM IST (Updated: 7 July 2020 4:12 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது.

பச்சை மண்டலம்

ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தது. இதில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 69 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அதன் பின்னர் 35 நாட்களுக்கும் மேலாக ஈரோடு மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. இதனால் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 2-ம் கட்டமாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. ஆரம்பத்தில் ஒன்று, 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் தற்போது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

புதிய உச்சம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் புதிதாக26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 248 ஆக இருந்தது. இந்த நிலையில் புதிய உச்சமாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

இதில் ஈரோடு மாநகர் பகுதியில் 5 வயது ஆண் குழந்தை உள்பட 19 ஆண்களும், 17 பெண்களும், நம்பியூரை சேர்ந்த 27 வயது பெண்ணும், கொடுமுடியை சேர்ந்த 55 வயது பெண்ணும், பெருந்துறை சிப்காட் பகுதியை சேர்ந்த 38 வயது பெண்ணும், சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 39 வயது ஆணும் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 40 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

2 பேர் வீடு திரும்பினர்

இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 2 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் காரணமாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்தது. 5 பேர் இறந்துவிட்ட நிலையில் தற்போது 200 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டு உள்ளது.

3,115 பேர்

மேலும் கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட புதுமைக்காலனி, ராஜாஜிபுரம், மரப்பாலம், அக்ரஹாரம், மாணிக்கம்பாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளும், புறநகர் பகுதிகளான பவானி, கோபி, சித்தோடு, மொடக்குறிச்சி, 46 புதூர், கொடுமுடி, சிவகிரி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் 51 இடங்களில் உள்ள 3 ஆயிரத்து 115 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வெளியில் வராதபடியும், வெளி நபர்கள் உள்ளே செல்ல முடியாதபடியும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பிளச்சிங் பவுடரும் போடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு நாள் 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 800 பேர் வரை கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story