நோய்த்தொற்று அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் கலெக்டரிடம் தி.மு.க. நிர்வாகிகள் மனு
கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கலெக்டர் ராமனிடம் தி.மு.க. நிர்வாகிகள் மனு அளித்தனர்.
சேலம்,
நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் என்றும், எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கலெக்டர் ராமனிடம் தி.மு.க. நிர்வாகிகள் மனு அளித்தனர்.
கலெக்டரிடம் மனு
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராமனை சந்தித்து சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
32 தகவல்கள்
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் இந்த அரசு அலட்சிய போக்குடன் நடந்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை சோதனை மையங்கள் உள்ளன? தினமும் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் விவரம், வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த நபர்களின் விவரம் உள்ளிட்ட 32 தகவல்களை கேட்டு மனுவாக எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
முழு கவனம்
தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என அரசு கூறி வருகிறது. ஆனால் கொளத்தூர் அருகே பண்ணவாடி கிராமத்தில் இறந்த வீட்டில் துக்க நிகழ்ச்சிக்கு வந்த ஏராளமானோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கும் என்ற அச்சத்தில் பரிசோதனைக்கு சென்றபோது நாளொன்றுக்கு 50 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என மருத்துவ ஊழியர்கள் தெரிவித்து மறுத்துவிட்டனர். ஆனால் அங்கு 90 பேருக்கு மேல் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே சமூக பரவலாக மாறவில்லை என்று கூறாமல் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story