கொரோனாவுக்கு மளிகை கடைக்காரர் பலி மேலும் 32 பேருக்கு தொற்று
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு மளிகைக்கடைக் காரர் நேற்று பலியானார். மேலும் 32 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 300-க் கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதேநேரம் கடந்த சில நாட்களாக கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் வரை வாலிபர்கள், பெண்கள் உள்பட மொத்தம் 19 பேர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த 88 வயது முதியவர், மளிகை கடை வைத்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் காய்ச்சல் ஏற்படவே, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அந்த முதியவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், நேற்று அவர் இறந்தார். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.
மேலும் 32 பேருக்கு தொற்று
இதற்கிடையே நேற்று பெண் போலீஸ், 2 சிறுவர்கள், 8 பெண்கள், 3 முதியவர்கள் உள்பட மொத்தம் 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதில் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகரில் 5 பேரும், நிலக்கோட்டை தாலுகாவில் 13 பேரும், நத்தம் தாலுகாவில் 10 பேரும், ஆத்தூர் தாலுகாவில் 2 பேரும், பழனி மற்றும் மதுரையை சேர்ந்த தலா ஒருவரும் ஆவர். இவர்கள் அனைவரும் திண்டுக்கல் மற்றும் பழனி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
Related Tags :
Next Story