சென்னையில் கொரோனாவுக்கு போலீஸ்காரர் பலி - துணை கமிஷனர் உள்பட 52 பேர் குணம் அடைந்தனர்
சென்னையில் கொரோனாவுக்கு போலீஸ்காரர் ஒருவர் பலி ஆனார். அதே நேரத்தில் மயிலாப்பூர் துணை கமிஷனர் உள்பட 52 போலீசார் குணம் அடைந்து நேற்று பணிக்கு திரும்பினார்கள்.
சென்னை,
சென்னை போலீசில் நேற்றுமுன்தினம் வரை 1,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 25 போலீசாருக்கு தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் தொற்று எண்ணிக்கை 1,327 ஆக உயர்ந்தது. கொரோனாவால் தாக்கப்பட்டு சென்னை போலீசில் ஏற்கனவே மாம்பலம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர் மணிமாறன் ஆகியோர் பரிதாபமாக இறந்து போனார்கள்.
இந்தநிலையில் நேற்று சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் நாகராஜன் (வயது 31). இவர் கடந்த 5-ந்தேதி அன்று தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இளம்வயதில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். மதுரையை சேர்ந்த இவர் 2013-ம் ஆண்டு சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணிக்கு சேர்ந்தார். இவரது மனைவி பெயர் கற்பக ஜோதி. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கொரோனா தாக்குதல் ஒருபுறம் அதிகரித்தாலும், குணம் அடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை போலீஸ்துறையில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 638 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 52 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள்.
இந்த பட்டியலில் மயிலாப்பூர் துணை கமிஷனர் ஷேகர் தேஷ்முக் சஞ்சய், சென்னை நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சொர்ணலதா ஆகியோர் உள்ளனர். மயிலாப்பூர் துணை கமிஷனரோடு, அந்த போலீஸ்நிலையத்தில் பணியாற்றும் 8 போலீசாரும் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து நேற்று பணிக்கு திரும்பினார்கள். துணை கமிஷனர் உள்பட அவர்கள் அனைவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர்கள் தினகரன், டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையொட்டி மயிலாப்பூர் போலீஸ்நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் காவலர்களிடம் மருத்துவமனைக்கு கீழே நின்றபடி, வீடியோ காலில் பேசி நலம் விசாரித்தார். விரைவில் குணம் அடைய வாழ்த்தும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story