தேனி மாவட்டத்தில் 4 டாக்டர்கள் உள்பட 92 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,149 ஆக உயர்வு
தேனி மாவட்டத்தில் 4 டாக்டர்கள் உள்பட 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,149 ஆக அதிகரித்துள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்நிலையில் நேற்று 4 டாக்டர்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 6 பேர் உள்பட 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டர், அதே மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் அவருடைய மனைவி, பயிற்சி டாக்டர் ஆகிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பத்தில் அரசு டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது மருத்துவமனை நடத்தி வரும் 71 வயது டாக்டர், அவருடைய மனைவி உள்பட 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 5 வயதுக்கு உட்பட்ட 2 பெண் குழந்தைகள், 7 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்.
108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள்
அதுபோல், சென்னைக்கு கொரோனா சிறப்பு பணிக்கு சென்றுவிட்டு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 10 பேர் தேனிக்கு திரும்பி வந்தனர். அவர்களுக்கு தேவதானப்பட்டி சோதனை சாவடியில் பரிசோதனை செய்த போது 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனியில் நகராட்சியின் விழிப்புணர்வு வாகன டிரைவர், 8 வயது சிறுவன், சிறுவனின் தந்தை உள்பட 21 பேருக்கும், 60 வயது முதியவர்கள் 2 பேர், 40 வயது பெண் என 3 பேருக்கும், ஆண்டிப்பட்டியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மகன் உள்பட 4 பேருக்கும், கண்டமனூரில் 34 வயது கூலித்தொழிலாளிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சித்தார்பட்டியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
1,149 ஆக உயர்வு
பெரியகுளத்தில் 60 வயது மூதாட்டி மற்றும் தம்பதி உள்பட 6 பேருக்கும், தாமரைக்குளம், வடுகப்பட்டியில் தலா ஒருவருக்கும், உத்தமபாளையத்தில் 2 வயது பெண் குழந்தை, குழந்தையின் தாய் உள்பட 6 பேருக்கும், க.புதுப்பட்டியில் 5 பேருக்கும், ராயப்பன்பட்டி, கூடலூர், சின்னமனூர் ஆகிய ஊர்களில் தலா 2 பேருக்கும், காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டியில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
ஒரே நாளில் 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,149 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சையில் இருந்தவர் சாவு
இதற்கிடையே கம்பத்தை சேர்ந்த 48 வயது புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளர் கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று முன்தினம் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனை முடிவு வரும் முன்பே நேற்று அவர் உயிரிழந்தார். பரிசோதனை முடிவு வந்தால் தான் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா? என்பது தெரியவரும்.
Related Tags :
Next Story