ஊரடங்கின்போது பறிமுதல் செய்து போலீஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க கோரிக்கை
ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை ஒப்படைக்க வேண்டும் என்று வாகன உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை,
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் படுத்தும்பாடு சொல்லி மாளாது. பலதரப்பட்ட மக்களும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். 3 மாதமாக ஊரடங்கின் காரணமாக வாகனங்களில் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வாகனங்களில் சென்ற பலரை ஆங்காங்கே போலீசார் பிடித்து, அவர்களிடம் இருந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மீண்டும் அந்த வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் அபராதம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் எண்ணற்ற மோட்டார் சைக்கிள்கள், கார்கள், சரக்கு வேன்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்களை ஊரடங்கு நேரத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களில் சிலவற்றை மட்டுமே திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன.
வருமான இழப்பு
பெரும்பாலான வாகனங்கள் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் தான் மாதக்கணக்கில் இருந்து வருகிறது. இதனால் சரக்கு வேன் உரிமையாளர்களும், அதன் டிரைவர்களும் வேலையை இழந்து, வருமானம் இன்றி தவிக்கின்றனர். அவர்கள் உரிய அபராதத்தை செலுத்துகிறோம். எங்களின் வாகனத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று கெஞ்சுகின்றனர்.
ஆனால் போலீசார் இதற்கெல்லாம் செவிசாய்ப்பதாக தெரியவில்லை. சரக்கு வாகனங்கள் வைத்திருக்கும் பலருக்கு, ஆன்லைன் வழியாக அபராதம் செலுத்துவது எப்படி என்பது தெரியவில்லை. இதனால் அவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்களாக இருக்கின்றனர்.
விடுவிக்க வலியுறுத்தல்
இதுகுறித்து சரக்கு வேன் உரிமையாளர்கள், டிரைவர்கள் கூறியதாவது:-
கடந்த 3 மாதமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் வேலை கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்கள் சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வைத்துக்கொள்கிறார்கள். இதனால் எங்கள் முழு வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. வாகனத்தை பறிமுதல் செய்ததற்கான அபராதத்தொகையை செலுத்த முன்வந்தபோதும், போலீசார் அலைக்கழிக்கிறார்கள். எங்கள் வாகனத்தை எப்படி மீட்பது என தெரியாமல் உள்ளோம். எங்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசும், காவல்துறை உயர் அதிகாரிகளும் எங்கள் வாகனங்களை விடுவிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story