தஞ்சை தெற்கு வீதியில் போக்குவரத்து மாற்றம் துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு


தஞ்சை தெற்கு வீதியில் போக்குவரத்து மாற்றம் துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 7 July 2020 6:18 AM GMT (Updated: 2020-07-07T11:48:54+05:30)

தஞ்சை தெற்கு வீதியில் போக்குவரத்து செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கு வீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நேற்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இந்த வீதியில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இருசக்கர வாகனங்கள் வலதுபுறமும், செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் இடதுபுறமும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 3, 4 சக்கர வாகனங்களை தெற்கு வீதியில் நிறுத்தக்கூடாது. இந்த வாகனங்கள் மேலவீதியில் இருந்து தெற்கு வீதிக்குள் வர அனுமதிக்கப்படுகிறது. கீழராஜவீதியில் இருந்து 3, 4 சக்கர வாகனங்கள் தெற்கு வீதிக்குள் செல்ல அனுமதி கிடையாது. ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. சரக்கு வாகனங்கள் காலை 9 மணிக்குள்ளும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையும் அனுமதிக்கப்படும். இரவு 9 மணிக்கு மேல் சரக்குகளை இறக்கி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதை தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்கள், வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வமணி, ரமேஷ்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story