சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: சம்பவ இடங்களில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மீண்டும் ஆய்வு


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: சம்பவ இடங்களில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மீண்டும் ஆய்வு
x
தினத்தந்தி 8 July 2020 5:00 AM IST (Updated: 8 July 2020 12:47 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சம்பவ இடங்களில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

தூத்துக்குடி, 

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், போலீஸ்காரர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பென்னிக்சின் நண்பர்களிடமும் விசாரணை நடந்தது.

நேற்று முன்தினம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய எழுத்தர், கம்ப்யூட்டர் பிரிவு போலீஸ்காரர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீஸ்காரர்களிடமும் இரவு வரை விசாரணை நடந்தது. அதே போன்று கொரோனா தடுப்பு பணியாளர்களான தன்னார்வலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தன்னார்வலர்கள் அளித்த தகவல்களின் பேரிலும் சாத்தான்குளம் பகுதியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மீண்டும் சாத்தான்குளத்துக்கு நேரில் சென்றார். அவர் சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கடைகள் இருந்த பகுதியை பார்வையிட்டார். அதன் அருகில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினார். அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் தனியாக பதிவு செய்து வாங்கி கொண்டார். அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு எவ்வளவு நேரத்தில் சென்றடைய முடியும், எத்தனை மணிக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர் என்பது பற்றி விசாரித்தார்.

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை எந்தெந்த இடங்களில் வைத்து அடித்தார்கள், ரத்தக்கறை படிந்த மேஜை, லத்தி வைக்கப்பட்டு இருந்த இடங்களையும் பார்வையிட்டார். மேலும் சம்பவத்தை போலீஸ் நிலையத்தில் உள்ள ஜன்னல் வழியாக சிலர் பார்த்ததாகவும், அலறல் சத்தம் கேட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீஸ் நிலையத்தில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே பார்க்க முடிகிறதா? என்பதையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு ஐ.ஜி. சங்கர் நடந்தே சென்றார். போலீஸ் நிலையத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி எவ்வளவு தூரத்தில் உள்ளது. அந்த ஆஸ்பத்திரிக்கு 2 பேரையும் நடத்தி அழைத்து சென்றார்களா?, எவ்வளவு தூரம் நடந்து சென்றனர்.

ஆஸ்பத்திரியில் எந்த அறையில் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, எவ்வளவு நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரங்களையும் கேட்டறிந்தார். அந்த பகுதியில் வேறு ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா, அப்போது ஆஸ்பத்திரியில் வேறு யாரேனும் இருந்தார்களா? என்பது உள்ளிட்ட விவரங்களை சேகரித்து உள்ளார். இரவில் நடந்த இந்த ஆய்வில் பல்வேறு தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து சென்றதாக கூறப்படுகிறது.


Next Story