கொரோனா நோயாளிகளுக்கு முறையாக உணவு வழங்க வலியுறுத்தி குமரியில் தி.மு.க.வினர் 36 இடங்களில் ஆர்ப்பாட்டம்
கொரோனா நோயாளிகளுக்கு முறையான உணவு வழங்க வலியுறுத்தி குமரியில் 36 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளச்சல்,
குமரி மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நபர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு முறையாக உணவு வழங்கவில்லை என்றும், தரமான உணவு வழங்க வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
குளச்சல் நகர தி.மு.க. சார்பில் அண்ணாசிலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ரகீம் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் அர்ஜூனன், மீனவரணியை சேர்ந்த பனிக்குருசு, நகர பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் லதா ராபின்சன், முன்னாள் கவுன்சிலர்கள் நூர் முகமது, ஷீலா ஜெயந்தி, சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணவாளக்குறிச்சி
குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மணவாளக்குறிச்சி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குட்டி ராஜன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் நிஜாம், முன்னாள் கவுன்சிலர் லீனஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வில்லுக்குறியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேரூர் தி.மு.க. செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாடத்தட்டுவிளை கூட்டுறவு வங்கி தலைவர் அகஸ்டின், சகாயம், தி.மு.க. இளைஞரணி தலைவர் பிரிட்டோ சாம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திங்கள்சந்தை, இரணியல், நெய்யூர் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. எப்.எம். ராஜரத்தினம், ஜோசப்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். மருங்கூர் பேரூராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
இதுபோல், வடசேரி அண்ணா சிலை அருகே, ராமன்புதூர், பீச்ரோடு, பறக்கை ரோடு சந்திப்பு, வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், அம்மாண்டிவிளை, வெள்ளிச்சந்தை, குருந்தன்கோடு, ஆளூர் உள்பட மாவட்டம் முழுவதும் 36 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story