குமரியில் ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ தாண்டியது


குமரியில் ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 8 July 2020 5:00 AM IST (Updated: 8 July 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் ஒரே நாளில் 83 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 800-ஐ தாண்டி உள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் ஆரம்ப காலகட்டத்தில் சொல்லும்படியாக இல்லை. பின்னர் வெளியூர்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக பரவல் இருந்தது. அந்த பரவலையும் மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்தியது.

தற்போது நாகர்கோவில் வடசேரி சந்தை, மார்த்தாண்டம் சந்தை மூலமாக கொரோனா பரவி வருகிறது. இந்த சந்தைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், காய்கறிகள் வாங்கிய பொதுமக்கள் மூலமாக பரவல் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 50-க்கு மேல் சென்ற பாதிப்பு எண்ணிக்கை நேற்று முன்தினம் 35 ஆக குறைந்தது. இதற்கிடையே நேற்று கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்தது. அதாவது நேற்று மாவட்டம் முழுவதும் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோட்டாரில் 26 வயது ஆண், குன்னியோடு பகுதியில் 51 வயது ஆண், மேக்காமண்டபம் பகுதியில் 50 வயது பெண், பிலாவிளை பகுதியில் 78 வயது ஆண், புளியன்விளை பகுதியில் 27 வயது ஆண், காட்டாத்துறை பகுதியில் 22 வயது ஆண், குருதிவிளை பகுதியில் 23 வயது ஆண், நெடுவிளை பகுதியில் 22 வயது ஆண், 57 வயது ஆண், ஆற்றூர் பகுதியில் 22 வயது பெண், 45 வயது பெண், திக்குறிச்சி பகுதியில் 67 வயது ஆண், வடசேரி பகுதியில் 24 வயது பெண் உள்பட மொத்தம் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 83 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 799 ஆக இருந்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 882 ஆக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். வீடுகளில் இருந்து வெளியே செல்லவே தயக்கம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோர்ட்டு பெண் ஊழியருக்கு கொரோனா

நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் 24 வயது பெண் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கும் சளி மாதிரி எடுத்து பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டு மூடப்பட்டது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் கோர்ட்டு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.


Next Story