இ-பாஸ் கட்டாயம் - பஸ் போக்குவரத்து நிறுத்தம்: தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விசைத்தறி துணி உற்பத்தி பாதிப்பு


இ-பாஸ் கட்டாயம் - பஸ் போக்குவரத்து நிறுத்தம்: தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விசைத்தறி துணி உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 8 July 2020 4:30 AM IST (Updated: 8 July 2020 3:37 AM IST)
t-max-icont-min-icon

இ-பாஸ் கட்டாயம், பஸ் போக்குவரத்து நிறுத்தம் போன்ற கட்டுபாடுகளால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் விசைத்தறி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

ஈரோடு வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ரயான் துணிகளும், மாணவ-மாணவிகளின் விலையில்லா சீருடைகள், விலையில்லா வேட்டி-சேலைகள் ஆகியன உற்பத்தி செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 2 மாதங்களுக்கும் மேலாக விசைத்தறிகள் செயல்படாமல் இருந்து வந்தது.

இதையடுத்து விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, விசைத்தறிகளை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் இயக்க அனுமதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு பகுதிகளில் உள்ள விசைத்தறிகள் செயல்பட தொடங்கின.

இந்த விசைத்தறி கூடங்களுக்கு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், வெப்படை, குமாரபாளையம் மற்றும் கரூர் மாவட்ட எல்லை பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலைக்கு வருகிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பஸ்கள் மூலமாக வந்து செல்கிறார்கள். ஆனால் கடந்த 1-ந் தேதியில் இருந்து கொரோனா பரவல் காரணமாக பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

மேலும், மற்ற மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வர இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இதன் காரணமாக வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு வருவதில்லை. எனவே விசைத்தறிகளை இயக்க முடியாமல் உரிமையாளர்கள் உள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி கந்தவேல் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள் மூலமாக தினமும் ரூ.12 கோடி மதிப்பிலான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு சில நாட்கள் முன்பே விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு விட்டன.

வெளிமாநிலங்களில் இருந்து துணிகள் ஆர்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதன்காரணமாக துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்த நிலையில், பொது போக்குவரத்து நிறுத்தம், இ-பாஸ் கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகளால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் 30 சதவீத துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story