கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு கர்நாடகம் வருகை: முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசனை
கர்நாடகத்தில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிலவரத்தை ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று கர்நாடகம் வந்தது. முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மூத்த மந்திரிகள், அதிகாரிகளுடன் மத்திய குழு ஆலோசனை நடத்தியது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதே நேரத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதே வேகத்திற்கு அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அதேபோல் உயிரிழப்பும் 500-ஐ நெருங்கியுள்ளது. இதனால் கர்நாடக அரசு மிகுந்த கவலை அடைந்துள்ளது. இதனால் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா, அவசர மருத்துவ சேவை மைய இயக்குனர் ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய மத்திய குழு 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கர்நாடகம் வந்துள்ளனர்.
முதல்-மந்திரி எடியூரப்பாவை அந்த குழுவினர் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த குழுவினர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், உடல் உபாதைகள் உள்ளவர்களின் விவரங்களை சேகரித்தல் மற்றும் மோசமான உடல்நிலையை கொண்டவர்களின் விவரங்களை சேகரித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டதற்காக கர்நாடக அரசை பாராட்டினர். அந்த அதிகாரிகள் பேசும்போது கூறியாவது:-
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து அதன் மூலம் நோயாளிகளின் உயிரை காப்பது தான் அரசின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறியும் பணியை சுகாதாரத்துறை சிறப்பாக செய்கிறது. இதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மோசமான உடல்நிலையுடன் இருக்கிறவர்களின் விவரங்களை அரசு சேகரித்து இருப்பது நல்ல விஷயம்.
இவ்வாறு அந்த அதிகாரிகள் பேசினர்.
கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனாவை எதிர்கொள்ள அரசு எடுத்து வரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதற்காக உருவாக்கப்பட்டு வரும் மருத்துவ வசதிகள் குறித்து எடுத்துரைத்தனர். மாவட்ட மற்றும் தாலுகா ஆஸ்பத்திரியில் பிராண வாயு அதாவது ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.
வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் புதிதாக 15 ஆயிரம் படுக்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“கர்நாடகத்தில் வைரஸ் தொற்று சமூகப்பரவல் நிலையை அடையவில்லை என்பதை மத்திய குழுவிடம் எடுத்து உரைத்தோம். அதனை ஏற்றுக்கொண்ட மத்திய குழு அடுத்த நிலையை (சமூக பரவல்) எட்டாமல் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.
கர்நாடகத்தில் கடந்த 6-ந் தேதி மாலை வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,317 ஆக இருந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை 406 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 10,527 ஆகவும் இருந்தது. 2 நாட்கள் கர்நாடகத்தில் ஆய்வு செய்யும் மத்திய குழு இங்குள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பிறகு இறுதியாக மீண்டும் மத்திய குழு முதல்-மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தும்.”
இவ்வாறு மந்திரி ஸ்ரீராமுலு கூறினார்.
மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் கூறும்போது “உலக அளவில் இறப்பு விகிதம் 4.5 சதவீதமாக உள்ளது. நமது நாட்டில் இறப்பு விகிதம் 2.5 சதவீதமாக உள்ளது. கர்நாடகத்தில் 1.56 சதவீதமாக இருக்கிறது.
அதனை 1 சதவீதத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்று மத்திய குழு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய குழு உறுதி அளித்து உள்ளது. முதியவர்கள், குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும், பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய குழு அறிவுறுத்தியது” என்றார்.
Related Tags :
Next Story