கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு செப்டம்பரில் தண்ணீர் திறக்க வாய்ப்பு ஆந்திர அதிகாரிகள் தகவல்


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு செப்டம்பரில் தண்ணீர் திறக்க வாய்ப்பு ஆந்திர அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 8 July 2020 5:35 AM IST (Updated: 8 July 2020 5:35 AM IST)
t-max-icont-min-icon

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு செப்டம்பரில் தண்ணீர் திறக்க வாய்ப்பு ஆந்திர அதிகாரிகள் தகவல்

ஊத்துக்கோட்டை,

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

கண்டலேறு அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வில்லை. அதன் பிறகு பலத்த மழை பெய்ததால் செப்டம்பர் மாதம் 25-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் ஆந்திராவில் கிருஷ்ணா நதி கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகளை சீரமைக்க கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது. கிருஷணா நதி கால்வாயில் உடைப்பு சீரமைக்கப்பட்டதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி பூண்டி ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

அவ்வாறு வந்து கொண்டிருந்த தண்ணீர் கடந்த மாதம் 24-ந்தேதி நிறுத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் கடந்த மாதம் 24-ந்தேதி வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 8.040 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரே தவணையில் 8.040 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு இரு தவணைகளில் அதிகபட்சமாக 7.976 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்தது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி இந்த மாதம் முதல் வாரத்தில் பூண்டி ஏரிக்கு ஆந்திர அரசு மீண்டும் தண்ணீர் திறந்துவிடும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

இது குறித்து ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், “பருவமழை தொடங்க உள்ளதையும், ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதி கால்வாயில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.“ என்றனர்.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 18.92 அடியாக பதிவானது. வெறும் 225 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 140 கனஅடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி வீதமும் தண்ணீீர் அனுப்பபடுகிறது.

Next Story