ஓய்வுபெறும் வயதை 59 ஆக உயர்த்தக்கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெறும் வயதை 59 ஆக உயர்த்தக்கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு அரசு ஊழியர் களின் ஓய்வுபெறும் வயதை ஓராண்டு நீட்டித்து, 59 ஆக மாற்றி அரசு உத்தரவிட்டது. ஆனால், சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் வயது ஓராண்டு நீட்டிக்கப்படவில்லை. எனவே, சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்களுக்கும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் சமூக சமையலறையில் சமைத்த சத்துணவு ஊழியர்களுக்கும், சோதனைச்சாவடி மற்றும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் ஊக்க ஊதியமும், பயணப்படியும் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டார தலைவர் முருகவள்ளி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் நாராயணசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வேடசந்தூர்
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டார துணைத் தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட சத்துணவு ஊழியர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் பழனி, நத்தம் உள்பட மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story