ராஜபாளையம் மலையில் பற்றிய தீயை அணைக்க கடும் போராட்டம்
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றிய தீயை அணைக்க வனத்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம், சேத்தூர் மற்றும் தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை வன சரகம் அமைந்துள்ளது. இந்த சரகமானது அய்யனார் கோவில், வாளைகுளம், ராஜாம்பாறை, அம்மன் கோவில், கோட்டைமலை, பிறாவடியார், நவலூத்து, தேவியாறு, சாஸ்தா கோவில் என 9 பீட்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பிறாவடியார் பீட் பகுதியில் திடீரென காட்டு தீப்பற்றியது. ஒரு பகுதியில் பற்றிய காட்டு தீ, வனப்பகுதியில் வீசிய பலமான காற்றால் மலையை சுற்றிலும் உள்ள பகுதிகள் முழுவதும் பரவியது. மலையை சுற்றிலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ கொளுந்து விட்டு எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.பிறாவடியார் பீட்டில் பற்றிய தீ தற்போது அருகே உள்ள நவலூத்து பகுதிக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மலையில் உள்ள புல் வகைகள் மற்றும் அரிய வகை மூலிகை செடிகள், மரங்களும் தீயில் எரிந்து வருகின்றன. தீயை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் 2-வது நாளாக கடுமையாக போராடி வருகின்றனர்.
Related Tags :
Next Story