தர்மபுரியில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்: தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தர்மபுரியில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.கோவிந்தசாமி, வி.சம்பத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் சரஸ்வதி முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி செயலாளர் சோழன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகையில், எங்களுடைய அதிகாரங்கள் என்ன? என்பதே எங்களுக்கு தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தல் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் நாங்கள் மேற்கொள்ள வேண்டிய எந்த பணிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு பணியில் எங்களை போன்ற மக்கள் பிரதிநிதிகளையும் பங்கேற்க செய்ய வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்கள்.
மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் யசோதா மதிவாணன் பதிலளித்து பேசுகையில், மாவட்ட ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள அனைத்து கவுன்சிலர்களுக்கும் முறையாக பிரித்து வழங்கப்படும். கிராமப்புற பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து அந்தந்த பகுதியை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர்களுடன் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்படும். கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநில நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே தனி அலுவலர்கள் காலத்தில் முடிவுற்ற பணிகளுக்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு விடுவிக்கப்பட்ட தொகையான ரூ.2 கோடியே 15 லட்சத்து 91 ஆயிரத்து 718-ஐ வழங்குவது தொடர்பாக மன்றத்தின் அனுமதி கோரப்பட்டது. பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்காத நிலையில், தனி அலுவலர்கள் பணி செய்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு தற்போது நிதி வழங்ககூடாது என்று தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஊராட்சி செயலாளருக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக 18-வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தாமரைச்செல்வன் மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story