ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 236 பேருக்கு கொரோனா: வங்கிகள், தபால் நிலையங்கள் மூடப்பட்டன


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 236 பேருக்கு கொரோனா: வங்கிகள், தபால் நிலையங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 8 July 2020 2:25 AM GMT (Updated: 8 July 2020 2:25 AM GMT)

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 236 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. வேலூரில், வங்கிகள், தபால் நிலையங்கள் மூடப்பட்டன.

வேலூர், 

வேலூர் மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் கம்ப்யூட்டர் பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்த குடியாத்தம் தாலுகா பி.கே.புரத்தை சேர்ந்த 30 வயது வாலிபருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. அதையடுத்து அவருக்கு கடந்த 3-ந்தேதி சளி மாதிரி சோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று தலைமை தபால் நிலையத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். தொடர்ந்து தபால் நிலையம் மூடப்பட்டது. கொரோனா அறிகுறி காணப்பட்ட 20 ஊழியர்களுக்கு தபால் நிலையத்தில் வைத்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டன.

இதேபோன்று பழைய காட்பாடி மற்றும் வி.ஐ.டி. அருகே உள்ள தபால் நிலைய கிளைகளில் பணிபுரியும் தலா ஒருவருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அந்த 2 தபால் நிலையங்களும் மூடப்பட்டன. அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு விரைவில் சளிமாதிரி சேகரிக்கப்பட உள்ளன.

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் 2 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

வேலூர்-ஆற்காடு சாலை சி.எம்.சி. மருத்துவமனை அருகே உள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள வங்கி ஊழியர்களின் சளி மாதிரி பரிசோதனையில் 4 பேருக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும் தொற்று உறுதியானது. இதனையடுத்து அந்த வங்கிகள் தற்காலிகமாக மூடப்பட்டது.

வேலூர் லட்சுமிபுரத்தில் 4 வயது ஆண் குழந்தை, சத்தியமங்கலத்தை சேர்ந்த 7 வயது பெண் குழந்தை, சைதாப்பேட்டை சேர்ந்த 9 வயது ஆண் குழந்தை, சத்துவாச்சாரியில் ஒரே பகுதியில் வசிக்கும் 2 குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் உள்பட வேலூர் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 99 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 99 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,198 ஆக உயர்ந்தது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,396 ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் 5 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்தி நிலையில் நேற்று ஒரே நாளில் 13 குழந்தைகள் உள்பட 99 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 633 ஆக உயர்ந்தது.


Next Story