நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 July 2020 5:12 AM GMT (Updated: 8 July 2020 5:12 AM GMT)

நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி நாகை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் தவமணி தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். 100 நாள் வேலைத்திட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 4 மணி நேர வேலையும், முழு ஊதியமும் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களிலும் மற்றவர்களை விட 25 சதவீதம் கூடுதல் அளவு நிவாரணம் சட்டப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் முனியாண்டி, தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மேலும் மாப்படுகை அண்ணா சிலை அருகே வட்டக்குழு உறுப்பினர் மணி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை பகுதியில் சோழம்பேட்டை, மறையூர் உள்பட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சீர்காழி

சீர்காழியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நடராஜன், பாலு, மோகனா, குணசேகரன், தமிழ்ச்செல்வி, இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொறுப்பாளர்கள் நீலமேகம், நாகையா, நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில், கற்கோவில், எடக்குடி வடபாதி, சட்டநாதபுரம், திருப்புங்கூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாய்மேடு, வேதாரண்யம்

வாய்மேடு அருகே உள்ள தாணிக்கோட்டகம் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க வேதாரண்யம் ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கோவை.சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வேதாரண்யம் தாலுகாவில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத்தினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story