“தினத்தந்தி” செய்தி எதிரொலி: உள்வாங்கிய ஆழ்துளை கிணறு மூடல் அதிகாரிகள் நடவடிக்கை
உள்வாங்கிய ஆழ்துளை கிணறு மூடப்படவேண்டும் என தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த ஆழ்துளை கிணற்றை மூடினர்.
ஆண்டிமடம்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த அழகாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கும், ஊர் பொது மக்களின் குடிநீர் வசதிக்காகவும் கடந்த 2009-ம் ஆண்டு போடப்பட்ட ஒரு ஆழ்துளை கிணறு அதன் மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்த மழையால் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைப்பை சுற்றி உள்ள மண் பகுதி உள்வாங்கியுள்ளது. இதனால் ஆழ்துளை கிணற்றை சுற்றி பள்ளமாக காணப்பட்டது.
மூடப்பட்டது
அதில் சிறுவர்கள் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நேற்று தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் (பொறுப்பு) மற்றும் அழகாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கலியபெருமாள் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டு உடனடியாக டிராக்டர் மூலம் மணல், ஜல்லி, மண் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து ஆழ்துளை கிணற்றின் பிளாஸ்டிக் குழாயை சுற்றிலும் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் கொட்டி மூடினர். இதனால் அந்த ஊர் பொதுமக்கள் தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story